Tuesday, September 23, 2014

எதை silent modeல் வைக்க முடியாது?

வகுப்பறையில் 12.12.10 அன்று வெளியான ஆக்கம்.

http://classroom2007.blogspot.in/search?q=உங்களைத்+தோண்டுங்கள்+உண்மை+தெரியும்!

'அழகாய்ப் பூக்குதே சுகமாய்த் தாக்குதே 
அடடா காதலைச் சொல்லாமல் கொள்ளாமல் 
உள்ளங்கள் பந்தாடுதே 
ஆசையைப் பேசிட வார்த்தை மோதும்'

எரிச்சலுடன்  கையை நீட்டி அலைபேசியை எடுத்தான் முரளி.  தூக்கம் கலைந்த கோபம் கண்களில் தெரிந்தது.  'ச்சே படுக்கறதுக்கு முன்னாடி silent mode ல வைக்க மறந்தாச்சு'.

தெரிந்த தொலைபேசி எண்ணாக இல்லை.  'ஹலோ யாரு?'

எதிர்முனையில் ஒரு பெண் குரல் பதட்டத்துடன் பேசியது.  'டாக்டர், இந்த நேரத்தில உங்களைத் தொந்தரவு செய்யறதுக்கு மன்னிச்சுக்கோங்க.  என் பையனுக்கு வீசிங் பிரச்னைக்கு உங்ககிட்டதான் ட்ரீட்மென்ட் எடுத்துக் கிட்டிருக்கேன்.   இன்னிக்கு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கற மாதிரி இருக்கு டாக்டர்.  மருந்தெல்லாம் கொடுத்துட்டேன்.  ஆனா கட்டுப்பட மாட்டேங்குது.  ரொம்ப பயமா இருக்கு.  இப்ப அழைச்சுட்டு வந்தா கொஞ்சம் பார்க்க முடியுமா டாக்டர், ப்ளீஸ்?'.

'ஒ நோ, நான் இப்ப ஊர்ல இல்லையேம்மா, நாளைக்குக் காலைலதான் வருவேன்.  நீங்க ஒண்ணு பண்ணுங்க.  இப்போதைக்கு உங்க வீட்டுக்கு பக்கத்தில ஏதாவது ஆஸ்பத்திரி இருந்தா பையனைக் காமிங்க.  நாளைக்கு கிளினிக் அழைச்சுக்கிட்டு வாங்க'. 

'சரி டாக்டர்'.

'யாருங்க போன்ல இந்த நேரத்தில?'

'வேற வேலை இல்ல, இப்ப பையனை அழைச்சிக்கிட்டு வரட்டுமான்னாங்க.  நான் ஊர்ல இல்லன்னு சொல்லிட்டேன்', அலைபேசியை silent mode ல் வைத்துக்கொண்டே பதில் சொன்னான் முரளி.
---------------------------------------------- 
காலையில் எழுந்ததுமே 'அப்பா' என்று ஓடிவந்து கழுத்தைக்கட்டிக்கொண்டான் முரளியின் 4 ஆம் வகுப்பு படிக்கும் ஒரே மகன் கார்த்திக். 

'என்னடா செல்லம்?'

'அப்பா, நீங்க இன்னிக்கு சாயங்காலம் foot ball வாங்கித்தரேன்னு சொன்னீங்களே ஞாபகம் இருக்கா?'

'ம்ம்ம் கண்டிப்பா.  சீக்கிரமா ஸ்கூல் க்குக் கிளம்பு.  பஸ் வந்துடும்'.

'சரிப்பா' குதித்துக்கொண்டே ஓடினான்.

'மைதிலி நான் கிளம்பறேன்'.

'சரிங்க'
------------------------------------------------
கிளினிக்கில் வழக்கம் போல் கூட்டம் அதிகம். 

'மாலா, இந்தா போன்.  ஏதாவது முக்கியமான காலா இருந்தாத்தவிர கொடுக்காதே'.  

'சரி சார்'.

நேரம் ஓடியதே தெரியவில்லை. 

'சார், உங்க பையன் ஸ்கூல்லேர்ந்து போன், உங்ககிட்ட பேசணுமாம்'.

'என்னவா இருக்கும்' புருவங்கள் சுருங்க போனை வாங்கினான்.

'டாக்டர் முரளி பேசறீங்களா?  வணக்கம் சார், நான் கார்த்திக்கோட கிளாஸ் மிஸ் பேசறேன்'.

'சொல்லுங்க'

'சார்..... இன்னிக்கு கேம்ஸ் period ல.......... விளையாடும்போது ஒரு பையன் கார்த்திக்கத் தள்ளி விட்டுட்டான்.  எதிர்பார்க்காம நடந்ததால... சாரி சார்........'

முரளியிடம் பதற்றம் தொற்றிக்கொண்டது 'மேல சொல்லுங்க'.

'பதட்டப்படாதீங்க சார்.  விழுந்தப்போ தலைல ஒரு சின்ன கல்லு குத்தினதுலே கொஞ்சம் ரத்தம் வந்துது, அவ்வளவுதான்.  நான் உடனே பக்கத்துல இருக்கிற கிளினிக் அழைச்சுட்டுப்போயிட்டேன்.  டாக்டர் மருந்து போட்டிருக்காரு.  டாக்டர் ஸ்லிப், மருந்து இரண்டுமே அவனோட ஸ்கூல் பையில வச்சுருக்கேன் சார்.  பஸ் டிரைவரும் அவன் வரவரைக்கும் வெயிட் பண்ணி இப்பதான் பஸ் எடுத்தாரு.  எப்போதும் வர நேரத்தைவிட 15 - 20 நிமிஷம் லேட் ஆகும்.  பெரிசா எல்லாம் காயம் எதுவும் இல்ல சார், நீங்க பயப்படாதீங்க.  தள்ளிவிட்ட பையனையும் சொல்லிப் புரிய வைச்சிருக்கேன்.  இனிமேல் இதுமாதிரி எதுவும் நடக்காம பார்த்துக்கறோம்' மூச்சு விடாமல் பேசி நிறுத்தினாள்.

'ரொம்ப நன்றி,  பரவாயில்லை விடுங்கம்மா.  பசங்களோட இதான் பெரிய தலைவலி.  நல்லவேளையா பெரிசா எதுவும் இல்ல.  இதுல உங்க தப்புன்னு சொல்றதுக்கு எதுவுமில்ல.  உங்களுக்கும் பாவம் இதால அசௌகர்யம்'.

'அதல்லாம் ஒண்ணுமில்ல சார், டீச்சர்னு ஆனப்புறம் இதெல்லாம் எங்க கடமைதானே, சரி சார், போனை வெச்சுடறேன்.'

'சரிம்மா'

போனை வைத்து நெடுநேரம் வரை, டீச்சர் கடைசியில் சொன்னது முரளியின் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது!

மனதை silent modeல் வைக்க முடியாது இல்லையா? அந்த டீச்சர் சொன்னது மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது!